ஈரோடு மாநகராட்சியின் சார்பில் காய்கறி வியாபாரிகள், விவசாயிகள், செய்தியாளர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பேருந்து நிலையத்தில் கரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமினைப் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பார்வையிட்டார்.
பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் வருபவர்களின் அதிகரித்துள்ளதால் கரோனா தாக்கத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களில் 33 பேருக்கு கரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது. மேலும் 19 பேர் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். அதில் 14 பேருக்கு கரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுபோல நாள்தோறும் 1000 முதல் 1100 நபர்கள் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுவதோடு, ஒரு நாள் முழுவதும் தங்க வைக்கப்படுகின்றனர். அப்படி வைத்ததற்குப் பிறகு அதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்கும், தொற்று இல்லாதவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு மக்கள் தங்கள் அருகாமை வீடுகளில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை. ஏனெனில் இம்மாவட்டமானது, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மேலும் மேற்கு மண்டலத்தில் 8 மாவட்டங்கள் உள்ளதால் மாவட்டங்களுக்குள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திடவும், அதற்காக இ-பாஸ் பெற்றுதான் மாவட்டங்களுக்குள் செல்ல வேண்டுமென்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: ரூ.15 லட்சத்தை நெருங்கிய அபராதம்