ஈரோடு அருகேயுள்ள மோளக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வீரப்பன். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று குடிபோதையில் இரண்டு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் வீரப்பனை அடித்துக் கொலை செய்து அதே பகுதியிலுள்ள ரயில்வே இருப்புப்பாதையில் வீசிச்சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மோளக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல், திருநாவுக்கரசு இருவரும் குடிபோதையில் வீரப்பனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த இரண்டு இளைஞர்களையும் பிடித்த காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: