ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட கடை வீதிகளில் உள்ள பாத்திரக்கடை, துணிக்கடை, பேன்ஸி ஸ்டோர்கள் அதிகளவு திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுவந்தது.
இதனால் கரோனா நோய்த்தொற்று ஏற்படும் என்றும் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கண்காணிப்பில் ஈடுபட்ட வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி அலுவலர்கள் அத்தியாவசியமற்ற கடைகள் திறக்கக் கூடாது என்று கண்டித்து எச்சரித்தனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் சீல்வைத்து வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் ஊரடங்கால் சாலைகளில் போக்குவரத்து குறைந்துள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்திய வணிகர்கள் சிலர் தங்களது கடைகளின் முன்பாக பந்தல் அமைத்து சாலைகளை ஆக்கிரமித்திருந்தனர். இதனையடுத்து நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் கடை வீதிகளில் தகுந்த இடைவெளியில்லாமலும், முகக்கவசம் இல்லாமலும் வெளியே வந்தவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காற்றில் பறக்கும் உத்தரவு - சந்தையில் மாஸ்க் அணியாத வியாபாரிகள்