திண்டுக்கல்லில் இருந்து ஜவுளி பாரத்தை ஏற்றிக் கொண்டு சேலத்தில் கொண்டு சேர்ப்பதற்காக ஈரோடு வழியாக சரக்கு லாரி, ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த சரக்கு லாரியை மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 26) காலை சரக்கு லாரி நாடார்மேடு பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த லாரி பிரதான சாலைப் பகுதியிலிருந்த மின்கம்பத்தின் மீது மோதி அருகிலிருந்த பழக்கடைக்குள் நுழைந்து நின்றது.
பழக்கடைக்குள் சரக்கு லாரி நுழைவதைக் கண்டு சுதாரித்த கடையின் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் உடனடியாக கடையை விட்டு வேக வேகமாக வெளியேறினர். இந்த விபத்தில் சாலையிலிருந்த மின்கம்பம் பாதியாக முறிந்து சாய்ந்ததுடன், பழக்கடையில் இருந்த பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பழ வகைகள் சேதமடைந்தன.
இதனிடையே சரக்கு லாரி கடைக்குள் நுழைவது தெரிந்து அனைவரும் வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து சூரம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த காவல் துறையினர் லாரியை மீட்டு காவல்நிலையம் எடுத்துச் சென்றதுடன் ஓட்டுநர் உட்பட உதவியாளரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
![erode load lorry ran over to a fruit shop](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02-lorry-accident-script-vis-7205221_26082020131020_2608f_1598427620_856.jpg)
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் பழக்கடையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கான தொகையை லாரியின் உரிமையாளர் வழங்கிட வேண்டும் என்கிற பழக்கடையினரின் கோரிக்கையையும்; மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பையும் ஏற்றுக்கொள்ள லாரி உரிமையாளருக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்ட இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!