ஈரோடு ஜங்ஷன் பணிமனையில் சரக்கு ரயில்களை நிறுத்தி வைக்கும் வசதி உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் ரயில்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு, சரக்கு லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன.
இந்நிலையில், ஜோலார்பேட்டையிலிருந்து வாலையாறுக்கு 45 ரயில் பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஈரோடு ஜங்ஷனுக்கு வந்தது. அப்போது, வாலையாற்றில் சரக்கு இறக்கி வைப்பதற்கு சிக்னல் கிடைக்காததால், ஈரோடு ஜங்ஷனில் கடந்த மூன்று நாட்களாக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, இந்தப்பெட்டியில் திடீரென புகை வரத்தொடங்கியதை கவனித்த ரயில்வே ஊழியர்கள், புகையை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால், நிலக்கரி என்பதால் புகையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் புகை வந்த ரயில் பெட்டியை தவிர, மற்ற பெட்டிகள் அனைத்தையும் வேறு இடத்துக்கு கொண்டுசென்றனர்.
மேலும், புகை வந்த ரயில் பெட்டியிலிருந்த நிலக்கரிகள் அகற்றப்பட்டது. இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.