சத்தியமங்கலம் வட்டாரத்தில் மலர் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கொத்தமங்கலம், பகுத்தாம்பாளையம், கெஞ்சனூர் சிக்கரசம்பாளையம், வடவள்ளி, தாண்டாம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை சாகுபடி செய்யப்படுகிறன.
தோட்டத்தில் விளையும் மல்லிகை பூக்களை விவசாயிகள் பறித்து வந்து வியாபாரிகள் முன்னிலையில் விவசாயிகள் சங்கத்தில் ஏலம் விடுகின்றனர். தற்போது ஏல விற்பனையில் மல்லிகை பூ கிலோ ரூ. 500க்கு வாங்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக மல்லிகை பூ கிலோ ரூ. 2,500வரை ஏலம்போன நிலையில் தற்போது கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மல்லிகை, ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ மகசூல் கிடைக்கும். உரம், பூ பறிப்பு போன்ற உற்பத்தி செலவு ரூ. 400 வரை செலவாகிறது. இந்நிலையில் மல்லிகை பூ கிலோ ரூ. 500க்கு விற்கப்படுவதால் உற்பத்தி செலவைக்கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், வரும் கோடை காலங்களில் பூக்களின் உற்பத்தி மேலும் அதிகரித்து விலை சரிவு ஏற்படும். விவசாயிகளின் நலன் கருதி மல்லிகைக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும். அரசு சார்பில் வாசனை திரவியம் ஆலைக்கு விவசாயிகளின் மல்லிகை பூவை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முட்டைகோஸ் விலைவீழ்ச்சி: கிலோ ரூ. 3க்கு விற்பனை