ஈரோடு மாவட்டம் மேட்டுக்டை அடுத்த மூலக்கரையைச் சேர்ந்தவர் பூபதி. மருத்துவரான இவருக்கு நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மேலும் தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைத்து நிர்வகித்து வந்தார். இவரது நிலத்தின் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, பணிகள் நடைபெறுவதைத் தடுக்க, நீதிமன்றத்தில் தடை ஆணை கேட்டு பூபதி வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த விசாரணை வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மருத்துவர் பூபதியின் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக மின்வாரிய அலுவலர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொக்லைன் இயந்திரங்களுடன் வந்தனர். தகவல் அறிந்து வந்த, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான கூட்டியக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என குற்றம்சாட்டிய விவசாயிகள், அலுவலர்கள் தங்களின் அனுமதியின்றி உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகவும் தெரிவித்தனர்.