ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக அமல்படுத்தகோரி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில், ஈரோடு மாநகராட்சி ஆணையரும், கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வகுமார சின்னையா, "வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்களிக்க பூத் சிலிப் 15 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது வரும் 12ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும். ஐனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி அராஜகம் குறித்த தகவல் வந்ததால் மனு கொடுத்துள்ளோம். பூத் சிலிப்பை வாக்காளர்களிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ரயில்வே காலனியில் 90 பேர்தான் வசிக்கின்றனர். ஆனால் 518 ஓட்டு இருக்கிறது. இது போல பல இடங்களில் இருக்கின்றது. இதுபோன்ற சூழலை வைத்து கள்ள ஓட்டு போடக்கூடாது என்பதற்காக மனு அளித்துள்ளோம். ஆளும்கட்சியினர் வாக்காளர்களின் சான்றுகளை பெற்று கள்ள ஓட்டுப்போட முயற்சிக்கின்றனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு?