ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவருபவர் ராஜா. இவரது மனைவி தாராதேவி. இருவரும் மருத்துவர்கள். ராஜாவின் தங்கையான மோகனப்பிரியாவிற்கு ரிதன்யா, மித்ராஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு இன்று (ஜனவரி 28) நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் ராஜா பாரம்பரிய முறையில் தாய்மாமன் சீர் வரிசை செய்து அசத்தினர். இனிப்பு, காரம் போன்ற தின்பண்டங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வகைகளாக வைத்து 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோபிசெட்டிபாளைத்திலிருந்து கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார்.
சடங்கு நடைபெறும் வீட்டிலும் பாரம்பரிய முறையிலும் நவநாகரிக காலத்திற்கு முன்பு முன்னோர்கள் காலத்தில் செய்யப்பட்ட அலங்காரம் போல் தென்னை ஓலையில் வெய்த அழகு பொருள்கள், ஓலை குடிசை, பாரம்பரிய நெல்களை கொட்டி அதில் வைத்த சீர் வரிசை தட்டுகள், பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. வருங்காலத்தில் பாரம்பரியத்தை நினைவுகூரவும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாரம்பரிய முறைப்படி தனது தங்கை மகள்களுக்கு இந்த சீர்வரிசை கொடுத்துள்ளதாக ராஜா தெரிவித்துள்ளார்.