ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் இதுவரை 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், ஈரோடு பெரியார் நகர் பகுதி அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மை பணியாளரான 55 வயது பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றும் அவரது கணவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து நோய் பரவலைத் தடுக்கும் விதத்தில் பெரியார் நகர் அரசு குடியிருப்புப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினர் பெரியார் நகர் அரசு குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்து வருபவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதேபோல் ஈரோடு பவானி பிரதான சாலை அசோகபுரம் பகுதியில் 40 வயது பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது கணவன், குழந்தைகள் இரண்டு பேர், கணவரின் தாய், தந்தை ஆகியோரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்..
இதனைத் தொடர்ந்து அப்பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி, திருவள்ளூர் நகர்ப் பகுதியில் கணவன், மனைவி இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் இருவரும் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க... ஈரோட்டில் 10 பேருக்கு கரோனா உறுதி!