இந்தியத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒன்பது நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின்போது தேசத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை, வன்முறை மூலம் ஒடுக்குவதைக் கண்டித்தும், விவசாய விளைபொருள் வியாபாரம், மத்திய அரசின் விவசாய விரோதச் சட்டம், மின்துறையை தனியாரிடம் கொடுக்க வழிவகுத்துள்ள மின்சாரச்சட்டத்தை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயப் பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபிச்செட்டிப்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் ஈரோடு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.