ஈரோடு: தொழிற்சாலைகளிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக, ரூ.1 கோடியே 35 லட்சம் வசூலித்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பவானி, காவிரி ஆற்று நீர் தொடர்ந்து மாசடைந்து வருவதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக வழக்குப் பதிவு செய்து, நீரை மாசிலிருந்து பாதுகாத்திடவும், நீரின் தரத்தை உயர்த்துவதற்குமான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் நீர் நிலைப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு, கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்துவந்தனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்க ஈரோடு மாவட்ட உயர்மட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காவிரி ஆறு, பவானி, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, வைராபாளையம் குப்பைக்கிடங்கு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது அங்குள்ள நீரின் தரம், உப்பின் அளவு, மாசுப்பட்டுதன் அளவு, சுத்தப்படுத்த வேண்டிய அளவு போன்றவை குறித்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சிப் பகுதிகளில் ஆய்வுப் பணியை முடித்துக் கொண்ட உயர்மட்டக் குழுவினர், பவானி நகராட்சிப் பகுதியிலுள்ள சாய, சலவை தொழிற்சாலைகளையும், அங்கு சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளையும் பார்வையிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நீர்நிலைகளை மாசுப்படுத்திய 25 சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. காவிரி ஆற்றங்கரையோரத்தில் இருந்த வைராபாளையம் குப்பைக் கிடங்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளை மாசுப்படுத்திய தொழிற்சாலைகளிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1 கோடியே 35 லட்சம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு நீரின் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி தீவிரம்