ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் கலந்துகொண்டார். முன்னதாக, திண்டல் முருகன் கோயில் அருகே அதிமுக கொடிக்கம்பத்தை கொடியேற்றி திறந்து வைத்தார். இதன் பின்னர் கல்லூரி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
அதன்பின், கொடிக்கம்பத்தில் உள்ள கல்வெட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதற்கு பதிலாக முதலைமைச்சர் என பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக சென்ற ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது 'முதலைமைச்சர்' புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இதைப் பார்த்த நெட்டிசன்கள் இனிமேல் எடப்பாடி பழனிசாமி 'முதலைமைச்சர்' என்று அழைப்போம் என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு முதலமைச்சர் என்பதில் உள்ள எழுத்துப்பிழையை கூட கண்டறிய தெரியாதவர்கள் அதிமுகவில் உள்ளனர் என்று சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகி மிக கடுமையாக வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, இந்தப் புகைப்படம் குறித்த தகவல் தெரிந்தவுடன் அந்த எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டது.