ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள எலத்தூர் செட்டிப்பாளையம் வாய்க்கால் அருகே 5 நபர்கள் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை கண்டதும் ஓட முயன்றனர். இதனை கண்டதும் காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 5 நபர்களும் முன்னுக்குப் பின்னாக பதிலளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 55 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.
மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபு, அஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்ராஜா, ஆண்டிபாளையம் பகுதியைச்சேர்ந்த சுரேஷ்குமார், எலத்தூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் அருண்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் கர்நாடக மாநிலம், ஜல்லிபாளையம் என்ற பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் 5 நபர்களையும் கைது செய்த காவல்துறையினர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தேனியில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் - ஹென்றி திபேன் பேட்டி