ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக இடைக்காலப் பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக 3ஆவது நாளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், ஈரோடு நகரில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்ட ஈபிஎஸ், ஆளும் திமுக அரசு மக்களை அடைத்து வைத்து பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
எந்தப் பகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்தாலும், வேட்பாளரை அழைத்துக் கொண்டுபோய் அதே இடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பொதுமக்களை அடைத்து வைத்து வாக்கு சேகரிக்கும் ஆளும் திமுக அரசை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து, ஊழலுக்கு பேயர் போன அரசு திமுக என்றும், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். அதன்பின் சட்ட ஒழுங்கு குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கங்கள், கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண் காவலர்களுக்கே மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது எனத் தெரிவித்தார்.
கீரியும் பாம்பையும் வைத்து வித்தை காண்பிப்பது போல் முதலமைச்சர் ஸ்டாலின் வித்தை காண்பித்து வருகிறார் என்று விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசுகையில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு பிரமாண்ட நினைவிடம் இருக்கின்ற போது, எழுதாத பேனாவுக்கு ரூ.81 கோடி செலவில் கடலில் எதற்கு சிலை வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மக்களை வரிப்பணத்தைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக தரையில் ரூ.2 கோடியில் பேனா சிலை வைத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பணம் கொடுத்தால் ஓட்டு வருமா..? டிடிவி மக்கள் செல்வாக்கால் வென்றார்' - கே.எஸ்.அழகிரி