ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. பொதுவாக வனப்பகுதியிலுள்ள சாலைகளில் செல்லும் மக்கள் உணவுப் பொருள்களை வீசி செல்வதால் அதனை உண்ணும் யானைகள், சாலைகளில் நாள்தோறும் உணவுகளை எதிர்பார்த்து காத்துகிடக்கின்றன.
அந்த வகையில் கர்நாடகத்திலிருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகள், கரும்புத் துண்டுகளை சாலையில் வீசியெறிவதால் அதனை விரும்பி உண்ணும் காட்டு யானைகள், நாள்தோறும் லாரியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில், காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சாம்ராஜ்நகரிலிருந்து வந்த கரும்பு லாரியை தனது கன்றுடன் வழிமறித்த காட்டு யானை, லாரியைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி, தும்பிக்கையால் கரும்பைப் பிடுங்கி தனது கன்றுக்கு கொடுத்தது. இதையடுத்து யானைக்கன்று கரும்பைத் தின்றபடி லாரி முன்பு நின்றுகொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து யானையும் அவ்விடத்தை விட்டு நகராமல், மீண்டும் கரும்புகளை பிடுங்கித் தின்றபடி நின்றகொண்டிருந்தது. யானையின் இத்தகைய நடவடிக்கையால் அவ்வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழ்நாடு-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த வன ஊழியர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கரும்புக் கட்டுகளைத் தும்பிக்கையில் எடுத்துக் கொண்டு யானை காட்டுக்குள் சென்றது. கரும்புக்காக யானைகள் சாலையில் முகாமிடுவதால் மைசூரு-ஆசனூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரம்