சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் காட்டினுள் வறட்சி நிலவிவருகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிக் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் கடந்த ஒருவார காலமாகத் தினமும் இரவில் வாழைத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், இன்று பவானிசாகர் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு எதிர்புறம் உள்ள விவசாயி துரைசாமியின் தோட்டத்தில் புகுந்த யானை ஒன்று அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களைச் சேதப்படுத்தின.
இதனைக் கண்ட விவசாயிகள் யானைகளை விரட்டப் பட்டாசுகளை வெடித்து துரத்த முயற்சித்தும், எந்த பலனும் கிடைக்கவில்லை. பின்னர் ஏப்ரல் 21ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் யானை வனப்பகுதிக்குச் சென்றது. தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும், அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கவும் விவசாயிகள் சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.