ஈரோடு : பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பி.கே.புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கொங்கர்பாளையம் அண்ணா வீதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவரது வீட்டிற்கு, மின் கம்பத்தில் இருந்து வீடு வரை உள்ள மின்சார வயர்கள் முழுமையாக பழுதடைந்ததால் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து பாப்பாத்தி டி.என்.பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து பழுதடைந்த மின்சார வயர்களை அகற்றிவிட்டு, புதிய வயர்களை பொருத்துவதற்காக கொங்கர்பாளையம் பகுதி மின்வாரிய வயர்மேன் சக்திவேல் என்பவர், ஒப்பந்த ஊழியர் விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு கொங்கர்பாளையம் சென்றார்.
கொங்கர்பாளையத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரில் மின் இணைப்பைத் துண்டித்து விட்டு இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று வயர்களை இணைப்பு கொடுத்தவுடன் வயர்மேன் சக்திவேல் டிரான்ஸ்ஃபார்மரை இயக்கச் சென்றுள்ளார். அப்போது விரைவில் மின் இணைப்பைக்கொடுத்துவிட்டு, கீழே இறங்குமாறு விஸ்வநாதனிடம் கூறிச்சென்றுள்ளார்.
விஸ்வநாதனும், சிறிது நேரத்தில் இணைப்பு கொடுத்து விடுவதாகவும் சிறிது நேரத்திற்குப் பிறகு மின் இணைப்பை வழங்கலாம் எனவும் கூறி விட்டு மின் கம்பத்தின் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.
மின்சாரம் பாய்ந்து சரிந்த விஸ்வநாதன்: அப்போது விஸ்வநாதன் மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கி விட்டதாக நினைத்த சக்திவேல், டிரான்ஸ்ஃபார்மரை ஆன் செய்யவே, மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டு இருந்த விஸ்வநாதன் மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் மீதே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அப்போது கம்பத்தின் கீழே நின்று கொண்டு இருந்த பாப்பாத்தி, விஸ்வநாதன் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுவதைப் பார்த்து சத்தமிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து வயர்மேன் சக்திவேலிடம் இதுகுறித்து கூறி மின்சாரத்தை துண்டித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பங்களாபுதூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பத்தில் சடலமாக தொங்கி கொண்டு இருந்த விஸ்வநாதனின் சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால், சடலத்தை மீட்க முடியாத நிலையில் மின் வாரிய ஊழியர்களை வரவழைத்து மின் கம்பிகளை துண்டித்து அதன் பின்னர் கயிறு மூலமாக விஸ்வநாதனின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட விஸ்வநாதனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : மின்சாரம் தாக்கி அரசு ஊழியர் உயிரிழப்பு