சத்தியமங்கலம் அருகே வரதபாளையத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களிலிருந்து எதிரே உள்ள வீடுகளுக்கு மின்சாரம் அனுப்படும். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மின் இணைப்பு ஒயர்களை இழுத்துச் சென்றதால் சாலையோர மின்கம்பம் திடீரென முறிந்து விழுந்தது.
அப்போது சாலையின் குறுக்கே மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. அவ்வழியாக வந்த இளைஞர் ராஜா சுதாரித்து பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தியதால் மின்கம்பியை தொடாமல் உயிர்தப்பினார். இதன் பின்னர் சாலைகளில் கற்கள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து மின்சாரம் பாய்ந்த ஒயரை யாரும் தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
தகவலறிந்த மின்சாரத் துறையினர் மின் இணைப்பை துண்டித்து போக்குவரத்தைச் சீர் செய்தனர். இதனால் சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
லாரி ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், வாகன ஓட்டிகளை இந்த வழியில்லாமல் மாற்றுவழியில் செல்ல ஏற்பாடு செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.