ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (பிப்.27) நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக ஈரோட்டிற்கு இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த ஜனவரி 28ஆம் தேதி கொண்டு வரப்பட்டன. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் உள்ள 1,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அந்தந்த வாக்கு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின.
இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் என மொத்தமாக 882 இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் தயார் நிலையில் உள்ளன.
வாக்குப்பதிவுக்காக நாளை 238 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கொண்டு செல்லப்படும் இந்த வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் தேர்தல் முடிந்த பின்பு பலத்த பாதுகாப்புடன் சித்தோடு போக்குவரத்து கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று வைக்கப்பட உள்ளன. இதனிடையே வேட்பாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுக்கு வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கையேடானது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறுகையில் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய பொறியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், வேட்பாளர்கள் தற்காலிக பிரசார பணிமனைகளை அகற்ற வேண்டும் எனவும்; ஒரு வேட்பாளர் மூன்று வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும்; அந்த வாகனங்கள் கணக்குகள் வேட்பாளரின் செலவு கணக்கில் காட்டப்படும் என்றார்.
இதையும் படிங்க: Erode by election: வெளி மாவட்ட வாகனங்கள் தீவிரத் தணிக்கை