ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (பிப்.27) தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளுக்கு சென்று பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி, ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பரப்புரையின்போது பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசுப்பொருட்களை வழங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஜனநாயக முறைப்படி இல்லை. பணநாயக முறைப்படியே நடந்துள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அது பண நாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மக்களை பார்க்காதபடி, அவர்களை அடைத்து வைத்த அராஜகமும் நிகழ்ந்துள்ளது. பரப்புரைக்கு சென்றபோது நானே அதை பார்த்துள்ளேன். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் விவகாரத்தில், மக்கள் தான் மாற வேண்டும். மக்கள் திருந்தினால் அரசியல்வாதிகள் மாறிவிடுவார்கள். எந்த கட்சியினர் பணம் கொடுத்தாலும் தவறு தவறுதான். பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக பல புகார்கள் அளித்தும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸூக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ தகவல்