வரும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடந்து வருகிறது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளர் விழிப்புணர்வு பணிக்காக, இணைய வழி போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுவரொட்டி வரைதல், கவிதை, பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் போட்டி ஆகியவை www.elections.tn.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் முகவரியில் நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ளவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
முறையான வாக்காளர்களின் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) போட்டி 2020 ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக பங்கேற்கலாம். போட்டி அனைத்தும் இணைய தளம் மூலம் மட்டும் நடக்கும். இந்தியாவில் 100 விழுக்காடு வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் ஓட்டுப்பதிவை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மையப்படுத்தி பங்கேற்பாளர்களின் கரு இருக்க வேண்டும். வரும், 18ஆம் தேதி மாலை, 5 மணிக்குள் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 7 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இவை தவிர, சட்டப்பேரவை தேர்தலுக்காக தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான குறும்படம், உயிர்ப்பூட்டல் படங்கள், தேர்தல் பாடல்கள், GIF, MEMES போன்றவை தயாரிக்க ஆர்வமுள்ள ஊடக நிறுவனங்கள், தனி நபர்களிடம் விலைப்புள்ளியும் கோரப்படுகிறது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தலைமை தேர்தல் அலுவலர், தமிழ்நாடு அலுவலக இணைய தள முகவரி, www.elections.tn.gov.in அறிவிக்கை எண்: 2846-இல் அறிந்துகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்காளர் தினம் - ஓவியங்கள் வரைந்து அசத்திய மாணவர்கள்