ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி, முதலீட்டுக் கழகம் மற்றும் தொழில் முதலிட்டு நிறுவனத்தின் சார்பில் ஈரோட்டில் முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பின் தலைவர் ரமேஷ் பாபனா தொடங்கி வைத்தார்.
இதில், ராஜஸ்தான் மாநில அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் ஊக்கம் போன்றவை குறித்து தொழில் முனைவோர்களுக்கு விளக்கப்பட்டது. ராஜஸ்தான் முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தொழில்களில் முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பன குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சூரிய ஒளி, காற்று போன்ற மரபுசாரா மின்சக்திகளுக்கான வாய்ப்புகள், நகை, கற்கள், ஜவுளி, செராமிக் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கைவினை பொருட்கள் மற்றும் வாகன உற்பத்தி போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும், தண்ணீர், அடிப்படை கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
ராஜஸ்தானில் முதலீடு செய்வதால், ஈரோடு மாவட்ட தொழில் முனைவோருக்கு புவி அமைப்பு ரீதியான பயன்கள் மற்றும் கூடுதல் வருவாயுடன் லாபமீட்டுதல், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மறுமலர்ச்சி போன்றவை குறித்தும் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.