ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் பிரசித்திபெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்தாண்டும் கடந்த மாதம் 26ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து 6ஆம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளான குண்டம் திருவிழா 9ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதியான இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் தேரை வடம் பிடித்திழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி இரவு மலர்பல்லக்கு என்னும் முத்துபல்லக்கு உற்சவ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 12ஆம் தேதி மஞ்சள்நீர் உற்சவமும் 18ஆம் தேதி மறுபூஜையுடன் விழாவும் நிறைவு பெறுகிறது.
பின்னர் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'தருமபுரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போக்சோவில் கைதான ஆசிரியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணி நீக்கம் மற்றும் சட்டம் என்ன கையாளுகிறதோ அதனை இந்த அரசு மேற்கொள்ளும்' என்று கூறினார்.
இதையும் படிங்க: குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்