சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தற்போது இயங்கி வரும் மாயா சூழல் சுற்றுலாவின் ஓர் அங்கமாக 'மாயா வனம் காண் திட்டம்' எனப்படும் வாகனம் மூலம் வன வளத்தைக் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர், தலமலை, டி.என்.பாளையம், ஆசனூர் மற்றும் கேர்மாளம் ஆகிய வனச்சரகங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பயணக் கட்டணமாக பார்வையாளர்கள் வனத்துறை வாகனத்தில் சென்று வர பவானிசாகர், ஆசனூர், கேர்மாளம் ஆகிய பகுதிகளில் பார்வையாளருக்கு தலா ஆயிரம் ரூபாயும் தலமலை , டி.என்.பாளையம் வழிகளில் பார்வையாளருக்கு தலா ரூ. 800 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான இணையவழி முன்பதிவினை எஸ்டிஆர்-டிஎன்.ஓஆர்ஜி (str-tn.org) எனும் இணையதளத்திலும் செய்து கொள்ளலாம் என ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
மாயா சூழல் சுற்றுலா சுற்றுலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஹாசனூர், ஜீரஹள்ளி, தலமலை, கடம்பூர், மாக்கம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு விடுதிகளில் தங்கி புலிகள் காப்பகத்தினுள் சென்று வரும் திட்டம் அமலில் உள்ளது.
முன்பதிவு செய்யும் பார்வையாளர்கள் புலிகள் காப்பகத்திலுள்ள பறவைகள், பட்டாம்பூச்சிகளைக் காண வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு கிடைக்காததால் வனத்துறை தற்போது புதியதாக 'மாயா வனம் காண்' திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.