ஈரோடு: ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட எல்லையில் உள்ள இந்தச் சந்தைக்கு பசு, எருமை, கன்றுகள், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இன்று(அக்.7) கூடிய வாரச்சந்தையில், வழக்கம்போல் ஆடுகள் விற்பனை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. 110 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள் வந்தன.
5 முதல் 12 கிலோ வரையிலான வெள்ளாடுகள் 5,500 ரூபாய் வரையும்; 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 4,500 ரூபாய் வரையும் விலை போனது.
'டல்லடித்த' விற்பனை
புரட்டாசி மாத விரதம் கடைப்பிடிக்கப்படுவதால், இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளின் வருகை, இந்தச் சந்தையில் குறைவாகவே இருந்தது. இதன்காரணமாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. அதேசமயம் ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கிச் சென்றனர்.
வழக்கமாக சந்தைக்கு 700 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும். இன்று கூடிய சந்தையில் 200 ஆடுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டது.
15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. புரட்டாசி மாதம் முடியும் வரை ஆடுகள் விற்பனை மந்த கதியில் தான் நடக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’நாம் தமிழர் கட்சி பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்பு’ - அழகிரி