ஈரோடு: சாஸ்திரி நகர் பகுதியிலுள்ள குமரன் வீதியில் வசிப்பவர், சேதுராமன். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு காவியா, பிரீத்தி என்ற மகளும் ராஜசேகரன் என்ற மகனும் உள்ளனர். சேதுராமன் தனக்கு சொந்தமான இடத்தில் சிமென்ட் ஓடு மேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இவர்களது வீட்டின் முன்பகுதியில் வளர்ந்த வேப்பமரம் மழை காலத்தில் அதிவேகமாக காற்று வீசுவதால், வீட்டின் மேல் செல்லும் மின்சார கம்பியில் மோதுவதால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது. இதனால் மின் வாரிய ஊழியருக்கு சேதுராமனின் மகன் ராஜசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், மின் வாரிய ஊழியர்கள் யாரும் வர வில்லை. இதனால் ராஜசேகரன் தனது வீட்டில் வளர்ந்த வேப்பமரத்தை வெட்டியுள்ளார். இதில் வேப்பமரத்தின் ஒரு சிறிய கிளை விழுந்து மின் கம்பத்தில் இருந்து, வீட்டிற்கு வரும் வயர் மீது விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த மின்சார வாரிய ஊழியர் மூர்த்தி மின் கம்பத்தில் இருந்து மீண்டும் மின் இணைப்பு செய்ய ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு ராஜசேகரன் அப்பகுதியில் உள்ள தெரிந்த நபர் மூலமாக ஊழியரிடம் பேசியுள்ளார். தாங்கள் கூலி வேலைக்குச் செல்வதால் பணத்தை குறைத்து வாங்கி கொள்ளும்படி ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர் சிபாரிசுக்கு ஏன் சென்றாய் என ராஜசேகரனை திட்டியுள்ளார். இதற்குப் பணம் தர முடியாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து, தனது வீட்டிற்கு மீண்டும் மின் இணைப்பு பெற்றுக்கொள்வதாக ராஜசேகரன் கூறியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, சிறிது நேரத்திற்குப் பின்னர் ராஜசேகருக்கு அழைப்பு விடுத்த மின் வாரிய ஊழியர் மூர்த்தி, மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மூர்த்தி மின் இணைப்பு விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். பின்னர், மின்சாரத் துறை அமைச்சரிடமே புகார் தெரிவித்தாலும் உனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க முடியாது என கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால், அருகிலுள்ள வீடுகளில் மின்சாரம் இருந்தும் தனது வீட்டில் மின்சாரம் இல்லாமல் இரண்டு நாள்களாக தவித்து வருவதாகத் தெரிகிறது. பணம் இல்லாமல் மின் இணைப்பு கொடுக்க முடியாது எனவும்; மின்சாரத்துறை அமைச்சரிடமே புகார் தெரிவித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மின் ஊழியர் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டியில் குத்தாட்டம் போட்ட மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!