ஈரோடு: ஈரோடு மாவட்டம் மரப்பாலம் நான்கு முனை பகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், 75ஆவது சுதந்திரதின விழா மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆக. 13) நடைபெற்றது. இதில், பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய அவர், “மதுரையில் நிதியமைச்சர் வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசிய விவகாரத்தில், பாஜகவின் அர்த்தம் என்னவென்று அவர்கள் வீசிய பொருளில் இருந்தே தெரிகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் மின் கட்டணம் அதிகப்படுத்தப்படவில்லை. அதிகப்படுத்தப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி அரசுதான். தமிழ்நாடு அரசை மின்சார கட்டணம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கடந்த ஓராண்டாக வற்புறுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் எவ்வளவு உயர்த்துகிறார்கள் என்பது தெரியவில்லை. மக்களை பாதிக்காத வகையில் உயர்வு இருக்கும் என்று நினைக்கிறேன்.
ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசி இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், ரஜினியின் அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு தயாராகி வருகிறார். ரஜினியை பாஜகவினர் முன்னிலைப்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. அவர் அரசியலுக்கு வந்தால்தானே முன்னிலைப்படுத்த வேண்டும்.
அவர் இருபது, முப்பது வருடங்களாக ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறுகிறார். எம்ஜிஆர் ஆட்சியை தர போகின்றேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு, ஜகா வாங்குவதுதான் அவரது வழக்கம்” என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: அசிங்க அரசியலை தவிர பாஜகவுக்கு வேறு எதுவும் தெரியாது… துரைமுருகன் கண்டனம்