ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரம்-கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. இதைப்பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தைப் பாதுகாப்புடன் ஓட்டிச்சென்றனர்.
இருப்பினும், சாலையோரம் நின்றுகொண்டிருந்து சிலர் மீது அந்த கார் மோதியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் விபத்து ஏற்படுத்திய காரை பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், குடிபோதையில் காரை ஓட்டிவந்தது திருச்செங்கோட்டைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பதும் அவருடன் பயணித்த பிரேம் ஆனந்த் என்பவர் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து, தினேஷ்குமாரையும், அவர் ஓட்டிவந்த காரையும் பொதுமக்கள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சத்தியமங்கலம் காவல் துறையினர், தினேஷ் குமாரிடம் விசாரணை செய்துவருகின்றனர்.