ஈரோடு: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் பாரம்பரியமாக நாடோடியாக சென்று கழுதைப்பால் விற்று வருகின்றனர். இதற்கான கழுதைகளை வளர்த்து கோடைக்காலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பயணித்து கழுதைப்பாலை கறந்து விற்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக கழுதைகள் வெளியே அழைத்துச் செல்லமுடியாத நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்த சில குடும்பத்தினர் சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப் பால் கறந்து விற்று வருகின்றனர்.
10 லிட்டர் வரை பால் கறக்கும் கழுதைகளை வைத்துள்ள இவர்கள், இரண்டு கழுதைகளுடன் ஒருவர் என சத்தியமங்கலம் நகர வீதிகளில் சென்று கழுதைப்பால் எனக் கூவி கூவி விற்றுவருகின்றனர். கழுதைப் பாலை விரும்பி சாப்பிடுபவர்கள் அங்கேயே பாலைக் கறந்து 50 மில்லி ரூ.200க்கும் விற்கின்றனர்.
நாளொன்றுக்கு கழுதை 500 மில்லி பால் சுரக்கும். அதில் குட்டி 250 மில்லி குடித்த பிறகு தினந்தோறும் 250 மில்லி மட்டுமே பால் கிடைக்கும் என கழுதைப்பால் விற்கும் பெண் தெரிவித்தார். கழுதைப் பால் குடித்தால் சுவாசக் கோளாறு போன்ற நோய் தீரும் என்பது மக்கள் நம்பிக்கை.
ஈரோடு மாவட்டத்துக்குப் பிறகு, கழுதைகளை லாரியில் ஏற்றி, கர்நாடகாவுக்கு கொண்டு சென்று அங்கு தினந்தோறும் நடைப்பயணமாக கிராமங்கள் தோறும் போய் கழுதைப் பால் விற்கவுள்ளதாகவும்; அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.400 வரை வருமானம் கிடைப்பதாகவும் அதில் மனதிருப்பதி இருப்பதாகவும் கழுதைப் பாலை விற்கும் பெண் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இறைச்சிக்காக ஆந்திராவிற்கு கழுதை கடத்தல் - ஒருவர் கைது