தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள், 225 கிராம ஊராட்சி தலைவர்கள், இரண்டாயிரத்து 97 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன. நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நேற்று காலை 8 மணிமுதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய 12ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வி.சி. வரதராஜன், திமுக சார்பில் சின்னசாமி போட்டியிட்டனர். காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட சின்னசாமி 73 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
சின்னசாமி வெற்றி செல்லாது மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. வரதராஜ் தேர்தல் அலுவலர்களிடம் கோரிக்கைவிடுத்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்தப் பிரச்னை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டுசெல்லப்பட்டது.
அதனைத்தொடர்ந்து செல்லாத வாக்குகள் மட்டும் எண்ணுவதற்கு ஆட்சியர் அனுமதி அளித்தார். செல்லாத வாக்குகள் 87 இருப்பதால் அதில் வெற்றிபெற முடியாது என்ற சூழ்நிலையில் 12ஆவது வார்டு வெற்றி வேட்பாளராக சின்னசாமி அறிவிக்கப்பட்டார்.
சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு திமுக வேட்பாளருக்கு கிடைத்த வெற்றியை ஆதரவாளர்கள் சாலையில் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தல்: சத்தியமங்கலம் வட்டத்தில் அதிமுக முன்னணி