ஈரோடு: ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று (நவ.06) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஜி.கே.வாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில் 80 கோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியாயவிலைக் கடையில் மண்ணெண்ணெய், அரிசி ஆகியவை வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது.
நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் திமுக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் சூழல் நிலவி வருகிறது. பெற்றோர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை திமுக நடத்தி வருகின்றனர்.
அதற்கு பதிலாக நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டுவர வேண்டும். நீட் தேர்வு விலக்கு கையெழுத்தில் 50 லட்சம் கையெழுத்து பெறுவது நோக்கம் இல்லை. அதற்கு மாறாக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
அப்படி மாணவர்களின் கல்வி தரம் உயரும் போது, மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வில் வெற்றி பெறுவார்கள். எனவே, திமுக மாணவர்கள் எதிர்காலத்தில் அரசியல் செய்யக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும்.
மின் கட்டண உயர்வால் திருப்பூர், கோவை ஜவுளி தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலம் நெருங்க இருப்பதால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பருத்தி மீதான சிறப்பு இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
விசாரணை அமைப்பு என்பது தனி சுதந்திரமாக செயல்படக் கூடிய ஒன்று. அதில் அரசியலுக்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை. புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. வருமானத்தை ஏய்ப்பவர்களுக்கு பாடம் கற்பிக்கத்தான் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது.
வருமான ஏய்ப்பு என்பதும், அதற்கு சோதனை என்பதும் அரசு மற்றும் அரசியல் வாதிகளின் தனிப் பிரச்னை இல்லை. தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் இல்லை என்பது பத்திரிகை செய்தி மூலம் தினந்தோறும் வருவது. இது தமிழக மக்களுக்கு வேதனை மற்றும் வெட்கமான ஒன்று.
கூட்டணி பொறுத்தவரை தற்போது தமிழகத்தில் ஒரு பக்கம் திமுக கூட்டணி, மற்றொரு புறம் அதிமுக, பாஜக, தமாக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தேர்தலின் முன்பு மக்கள் தொடர்பை அதிகப்படுத்தி கட்சி கூட்டம் வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
எனது தனிப்பட்ட அதிகாரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது. கட்சி நிலைப்பாடு உணர்ந்து தான் கூட்டணி முடிவு செய்வோம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக, பாஜக நலன் விரும்பியாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. பொது வாழக்கை, நடிகர் உட்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை மக்கள் தான் ஏற்று கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஆசிரியை உயரதிகாரிகள் ரேகிங் செய்ததாக புகார்.. நெல்லையில் நடந்தது என்ன?