ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி பாலப்படுகை கிராமம் அமைந்துள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பாலப்படுகை கிராமத்தில் முகாமிட்டு ஓரிடத்தில் அமர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வாக்காளர்கள் தங்களது பூத் சிலிப்பை காண்பித்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து கிராம மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பை திமுக நிர்வாகிகளிடம் காட்டிய பின் எவ்வளவு வாக்குகள் உள்ளது என கணக்கிட்டு பணம் வழங்கினர். ஒரு ஓட்டுக்கு ருபாய் 250 வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்திலும் வாக்களிப்பதற்கு பணப்பட்டுவாடா செய்ததால் மலை கிராம மக்கள் பூத் சிலிப்பை காண்பித்து பணம் பெற்றுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.