ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் உருவ சிலை அமைக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், கருணாநிதியின் குருகுலமாக விளங்கும் ஈரோட்டில் அவருக்கு இரண்டாவது சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்காக பல்வேறு தியாகங்கள் செய்திருக்கும் கருணாநிதிக்கு இங்கு சிலை திறந்திருப்பது பெருமையாக உள்ளது.
கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததாக இருந்தது. பள்ளியில் இடம் இல்லை என தெரிவித்ததால், பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தி பள்ளியில் சேர்ந்தவர்தான் கருணாநிதி. திருமணத்தின்போது மணமாலையோடு சென்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார்.
மொழி போராட்டம் நடத்தி கள்ளக்குடி என பெயர் மாற்றம் கொண்டுவந்தார். தனிமை சிறையில் 1966இல் மொழி போருக்காக போராடியதற்காக அடைக்கப்பட்டார். அவருக்கு ஆறு அடி இடம் கொடுக்க மறுத்ததுதான் தற்போதைய அதிமுக அரசு. அதன் பிறகு சிலைகள் அமைக்கவும் போராடிதான் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் சிலைகள் அமைக்கப்படும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து மறைந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கட்சியினர் தற்போதுவரை இரங்கல் கூட்டம் நடத்தவில்லை என்றார்.
பின்னர், சாலையோர பழம் வியாபாரம் செய்பவர்களுக்கு நிழற்குடைகளை வழங்கினார். மேலும் திமுகவின் சார்பில் பராமரிப்பு செய்யப்பட்டுவரும் போட்டி தேர்வுக்கான நூலகத்தை பார்வையிட்ட ஸ்டாலின், ரூ. 30ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களையும் வழங்கினார்.