ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பவளக்குட்டை அடர்ந்த வனத்தில் கம்பத்ராயன் மலை உச்சியில் அமைந்துள்ளது, ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயில்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி 3ஆவது சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் சத்தியமங்கலம், அன்னூர், கோபி, மைசூர், சாம்ராஜ்நகர், புன்செய்புளியம்பட்டி, கே.எம்.பாளையம், அத்திப்பண்ணகவுண்டர்புதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலணி அணியாமல் ஏழு மலைக்குன்றுகளை கடந்து திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
அதேபோன்று இந்த ஆண்டும் நரசிம்ம பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து இவ்விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, 20 அடி உயரம் கொண்ட கருடக்கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபஒளி 35 கி.மீ., தூரத்தில் உள்ள புன்செய்புளியம்பட்டி, மொண்டி பெருமாள் கோயில் வரை தெரிந்தது.
ஏழு மலைகள் கடந்து கொண்டாடப்படும் இந்த தீப ஒளித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, தொட்டிமடுவு, கே.என்.பாளையம் கிராமங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த காவலருக்கு சக காவலர்கள் நிதியுதவி!