ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து கே.என்.பாளையம் பகுதிக்கு ஹாலோ பிளாக் கல் ஏற்றுவதற்காக டிராக்டர் சென்றுக் கொண்டிருந்தது. டிராக்டரை முருகேசன் என்பவர் ஓட்டிச் சென்றார். அவருடன் கடம்பூர் மலைப்பகுதி சின்ன சாலட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுமணி (வயது 22), கார்த்தி இருவரும் உடன் இருந்தனர். டிராக்டர் கே.என்.பாளையம் வன சோதனை சாவடி அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த வேலுமணி டிராக்டரின் முன் பகுதியில் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டிச் சென்ற முருகேசன் மற்றும் கார்த்தி இருவரும் கீழே குதித்து உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வளையல்காரபட்டி சேர்ந்த பரத் ( வயது 20) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த நிலையில், இவர் தனது நண்பர்களான பத்தாம் வகுப்பு மாணவன் யஷ்வந் மற்றும் மாராட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கௌதம் ( வயது 20) ஆகியோருடன் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பாலூர் பகுதியில் உள்ள சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனம் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் மூவரும் தூக்கிவீசப்பட்ட நிலையில் பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கௌதமும் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த யஷ்வந்தை மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து தருமபுரி வழியாக மதுரைக்கு இரும்பு பைப் பாரம் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ராம்குமார் (28) படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் - பெங்களூரு சாலையானது ஒருவழிப்பாதையா(One Way) மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னர் விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்ட பிறகு பெங்களூரு - சேலம் சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.