ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இங்கு புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (நவ. 25) பிற்பகல் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே அரேப்பாளையம் பிரிவு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்துச் சென்ற ஆண் புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையின் நடுவே விழுந்து உயிருக்கு போராடியது.
அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் வனச்சரக அலுவலர்கள் காயம்பட்ட புள்ளிமானை மீட்டு பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு செல்லும் வழியிலேயே மான் உயிரிழந்தது.
இதையடுத்து வன கால்நடை மருத்துவர் அசோகன், இறந்த மானின் உடலை உடற்கூராய்வு செய்ததில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் என்பதும் இடுப்பு, காலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.