ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கூகலூர் தண்ணீர் பந்தல் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால், விவசாய கிணறுகளில் நுரையுடன் கூடிய ரசாயன கழிவுகள் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் ரசாயன கழிவுநீர் தேங்கியுள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது, இந்த காகித ஆலை கழிவு நீரால் 500-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் ஆதாரம் இல்லாமல் போய்விடும். கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்படுவதுடன், பால் உற்பத்தி பாதிக்கப்படும். கழிவுநீரை சுத்தம் செய்து விவசாய நிலங்கள் பாதிக்காதபடி ஆலை நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.ஆர்.ஈஸ்வரன், “காகித ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் அளித்ததின்படி, ஆய்வு செய்துள்ளோம். காகித ஆலை நீரை பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக புற்றுநோய் வரும். அதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. இந்த தொழிற்சாலை நிறுத்தப்பட வேண்டும். நிரந்தரமாக இதற்கான தீர்வு இல்லாமல், இந்த தொழிற்சாலை இயக்கப்படக்கூடாது.
திரும்பவும் இது தொடரும் என்றால், பொதுமக்களை அழைத்துக்கொண்டு மேல் நடவடிக்கைகள் என்ன எடுக்க வேண்டுமோ, அதை எடுப்பதற்கு தயங்க மாட்டோம். அதனால் இந்த ஆலையை நிர்வகிப்பவர்கள் உடனடியாக இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை ஒரு எச்சரிக்கையாகவே மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டிய இளைஞருக்கு வலைவீச்சு!