ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவில் இருந்த தாளவாடி மலைப்பகுதி தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு தற்போது அங்கு வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாளவாடியில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல்துறை, வனத்துறை, சுகாதாரத் துறை, சமூக நலத்துறை என பல்வேறு துறைகளில் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சம்பள பட்டியலை 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியமங்கலத்திற்கு சென்று அங்குள்ள கருவூலத்தில் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுவாக ஒரு தாலுகாவிற்கு ஒரு கருவூலம் அமைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில் தாளவாடி மலைப்பகுதி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தாளவாடியில் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதேபோல் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஆயுள் சான்றுகளை சமர்ப்பிக்கவும், வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதிய கணக்கு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கணக்குகளை சமர்ப்பிக்க சத்தியமங்கலம் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
இதுபோன்ற சமயங்களில் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு கருவூல பணிகளை முடிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே தாளவாடியில் கருவூல வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே தாளவாடி மலைப்பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாடு பட்ஜெட் நிகழ்வுகள் உடனுக்குடன்.! உள்ளங்கையில்..!