ஈரோடு: மாநகராட்சியில் தூய்மை பணியாளர், மேற்பார்வையாளர், கணினி இயக்குநர், தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என தினக்கூலி பணியாளர்கள் 800க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 510 ரூபாய் முதல் 707 ரூபாய் வரை தினசரி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்கண்ட பணிகளை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தங்களை பணிநிரந்தரம் செய்யவும், மாநகராட்சியே நேரடியாக பணிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி மாநகராட்சி தினக்கூலி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கான அரசாணைகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தொழிலாளர்களின் போராட்டத்தினால் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.
கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்து மாநகராட்சி அலுவகம் முன்பாக தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். துறை அமைச்சருடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: ‘பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தகுந்த காப்பீட்டு தொகை வழங்கவில்லை’ - அன்புமணி ராமதாஸ்