ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறித்து விவரிக்க, இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் சிஎன் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பயன்படுத்திய முகக் கவசத்தை முறையாக அப்புறப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். தொற்று பரவாமல் இருக்க கட்டாயம் 50 விழுக்காடு மக்களாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தற்போது இரண்டு விழுக்காடு மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர் அரசு வழிகாட்டுதலின்படி தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். அரசின் கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டுமே மிகவும் பாதுகாப்பானவை. பொதுமக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் ஊரடங்கு நிலைக்கு தள்ளப்படுவோம். தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்!