ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேசா (50). இவர் கூலித் தொழிலாளி. இவர் ஐந்து பசு மாடுகள் வளர்த்துவருகிறார். இன்று (மார்ச் 31) வழக்கம்போல் மேய்ச்சலுக்கு, தனது தோட்டத்தில் விட்டிருந்தார். அப்போது மேய்ந்துகொண்டிருந்த மாடு, கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்துள்ளது.
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதறியது. ரத்தம் சொட்ட மாடு கீழே விழுந்து உயிருக்குப் போராடிவந்தது.
இது பற்றி உழவர்கள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு வைத்து வேட்டையாடிவருவதாகவும், அதை மாடுகள் கடித்து தொடர்ந்து இறந்துவருவதாகக் கூறி மாட்டுடன் தாளவாடி காவல் நிலையத்திற்கு, விவசாயி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடுகள் இறந்துவருவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதி அளித்தனர்.
காட்டுப்பன்றியை வேட்டையாடும் நபர்கள் மீது வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி உழவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்: மூவர் உயிரிழப்பு, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!