ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா நோய்த் தொற்று அதிகம் பரவி வருகிறது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை 100க்கும் மேற்பட்டவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் சித்தோடு நடுப்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் பிரசவத்திற்கான காலம் முடிவடைந்ததை அடுத்து மருத்துவமனை டீன் மணி தலைமையிலான மருத்துவக் குழுவினரும் மகப்பேறு மருத்துவர்கள் குழுவினரும் இரண்டு பெண்களுக்குமான பிரசவ ஏற்பாடுகளை செய்தனர்.
அதன்படி, இன்று காலை இருவருக்கும் ஒருவர் பின் ஒருவராக அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொண்டதில், சித்தோட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பெண் குழந்தையும், கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்தன. இந்த இரண்டு குழந்தைகளுக்கும் நோய் பாதிப்பில்லை என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் நல்ல உடல்நலமுள்ள குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.