ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் அருகே நேற்றிரவு (மே 18) காட்டு பன்றியை வேட்டையாடி இருசக்கர வாகனத்தில் உடலை வைத்து அடையாளம் தெரியாத நபர் கடத்துவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேட்டைத்தடுப்புக் காவலர் கிஷோர் இரு சக்கர வாகனத்தில் அவ்வழியாக வரும் கடத்தல் கும்பலை காண்காணித்துவந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் கடத்தல் கும்பல் அதிவேகமாக செல்வதைப் பார்த்து அவர்களை பின்தொடர்ந்தார்.
வனத் துறையினர் துரத்துவதை பார்த்து கடத்தல் கும்பல் தப்பிக்க வேகமாக பைக்கை ஓட்டினர். இதனால் அதிக வேகமாக பைக் சென்றதால் நிலைதடுமாறி ராஜன்நகர் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியது.
அப்போது இரு சக்கர வாகன டேங்கர் கவரில் பதுக்கி வைத்திருந்த அவுட் காய் என்னும் நாட்டுவெடிகுண்டு வெடித்தது. இதில் பைக்கில் வந்த ஒருவர் பலத்த காயமடைந்தார். விசாரணையில் அவர் புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்தது. அவரைப் பின் தொடர்ந்து வந்த காவலரும் இதில் காயமடைந்தார்.
இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் அரவிந்த் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வேட்டைத்தடுப்பு காவலர் கிஷோர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை அனுப்பிவைக்கப்பட்டார்.