ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் வகைகளை விற்பனை செய்வதற்கு வசதியாக 4 மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொண்டு வரப்படும் மஞ்சள் ரகங்கள் ஏலம் விடப்பட்டு, மஞ்சள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சள் வியாபாரிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மஞ்சள் வியாபாரி, சென்றதாகக் கருதப்படும், மாவட்டத்திலுள்ள 4 மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை31) முதல் 4 நாள்களுக்கு மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படாது என்றும், அதற்குப் பிறகு மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.