தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, மேற்கு மண்டல மாவட்டங்களுக்கிடையே உள்ள எட்டு மாவட்டங்களுக்கும், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் முழுவதுமுள்ள 134 வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளதுடன், சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே ஒரு மாவட்டத்திற்குள் நுழைந்திட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி சோதனைச்சாவடிப் பகுதியில் மூன்றாவது நாளாக, இன்றும் இ-பாஸ் இல்லாமல் ஈரோடு மாவட்டத்திற்குள் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக குறைவான காவல் துறையினரால் சோதனைச்சாவடி போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போனதன் காரணமாக, இன்று சோதனைச்சாவடியில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு, போக்குவரத்து நெருக்கடியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் காவல் துறையினருக்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்கிட வெண்டும் என்றும் மாவட்ட காவல் துறையினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.