ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர்கள் தம்பதியர் செல்வராஜ் - தமிழரசி. கடந்த சில ஆண்டுகளாக, இவர்கள் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தம்பதியரிடம் மாதாந்திர சீட்டுக்கு பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, சீட்டு கட்டிய பலருக்குப் பணத்தைத் திருப்பித் தரவில்லை என, தம்பதியர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், செல்வராஜ், தனது மனைவி, குடும்பத்தினருடன் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகினார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று (டிச.14) மதியம் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று செல்வராஜ், தமிழரசி தம்பதியினரிடம் மாதாந்திர சீட்டுக்கு பணம் கட்டியதாகவும், பணத்தைத் திருப்பித் தராமல் வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாகவும், அவர்களிடமிருந்து சீட்டுக்குக் கட்டிய பணத்தைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.
அப்போது பண மோசடி விவகாரம் என்பதால், இதுகுறித்து ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு புஞ்சை புளியம்பட்டி காவல் நிலைய காவலர்கள் கூறியதையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். தம்பதியர் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.