உலகம் முழுவதும் மார்ச் மாதம் எட்டாம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நாளில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஈரோடு ரங்கம்பாளையத்திலுள்ள தனியார் கல்லூரியின் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
பெண்களுக்குரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், பெண் கல்வியை கட்டாயமாக்கிட வேண்டும், வேலைவாய்ப்பில் பெண்களுக்கான முன்னுரிமையை உத்தரவாதப்படுத்திட வேண்டும், பெண்களுக்கான உரிமையை வழங்குவதற்கு வீடும், நாடும் முன்வர வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பேரணியில், பெண்கள் - பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள், வன்கொடுமைகளை தடுப்பதற்கு தண்டனைகளை கடுமையாக்கிட வேண்டும், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும், பெண் குழந்தைகளுக்கான முக்கியத்துவத்தை குழந்தைகளின் பெற்றோர் வழங்கத் தயாராகிவிட வேண்டும், பெண் சிசுக் கொலை செய்வோர் மீது அதிகபட்ச தண்டனையை விதித்திட வேண்டும் என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரணியின்போது “பாலின சமத்துவம்” குறித்த துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களால் பொதுமக்களுக்கு வழிநெடுக விநியோகிக்கப்பட்டன. ஈரோடு கலை அறிவியல் கல்லூரி வாசலில் தொடங்கிய இந்தப் பேரணி முதன்மையான வீதிகள் வழியாக சென்று இறுதியில் கலைஞர் நகர் பகுதியில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் அமல்படுத்த விடமாட்டோம் - ராமச்சந்திரன்