ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அதேப் பகுதியில் புதியதாக வீடு கட்டிவருகிறார். இதற்கு மின் இணைப்பு அமைக்கும் பணியை சின்னமொடச்சூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிசன் பாபுவிடம் கொடுத்துள்ளார். அவரும் மின் இணைப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று பணி உதவிக்காக கோபி நாயக்கன்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பாஸ்கர் என்பவரை சேர்த்துக் கொண்டு வேலைப்பார்த்துள்ளார். பணியின் போது புதியதாக கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டியில் பியூஸ் போட பாஸ்கர் சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் புதிய வீட்டின் கட்டப்பணி நடைபெறும் இடத்தின் மேல்பகுதியில் உயரழுத்த மின் வயர் செல்வதால் அதற்கு கீழ் மின் இணைப்பு பெட்டி பொருத்தப்பட்டிருந்தாலும், தற்போது மழை பெய்து நிலம் ஈரத்துடன் இருந்தாலும் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பாஸ்கர் உயிரிழந்திருக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சார்ஜ் போட்டபடி செல்ஃபோனில் பேசியவருக்கு நேர்ந்த கதி! - நாமக்கல்லில் சோகம்