ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்-கஸ்தூரி தம்பதியினரின் மகன் தருண்ராஜா, பி.எட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
இதுவரை தேசியத் தலைவர்கள், கோயில் சிலைகள், கடவுள் உருவங்கள் என 700-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். 2013ஆம் ஆண்டு விஸ்வ மலர் சார்பில், இளம் ஓவியர் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பன்முகத்திறன் விருது, பெஸ்ட் பெயின்டர் விருது, இளம் ரவிவர்மா விருது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலக சாதனை
கடந்த மாதம் 'ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு' என்ற அமைப்பு நடத்திய உலக சாதனையாளர்களின் போட்டியில் தருண்ராஜா ஆன்லைன் மூலமாக பங்கேற்றார்.
இதில் அவர் ஏ4 தாளில் 9036 விநாயகர் உருவப் படங்களை வரைந்து அனுப்பியுள்ளார். இந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவருக்கு உறவினர்கள், நண்பர்கள் எனப் பலர் பாராட்டி வருகின்றனர்.
![ஏ4 தாளில் 9036 விநாயகர் உருவப் படங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-01-sathy-a4paper-drawing-vis-tn10009_13082021151216_1308f_1628847736_190.jpg)
இதையும் படிங்க: பைந்தமிழ் எழுத்துக்களில் திருவள்ளுவர்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!